search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கோர்ட்"

    பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர் லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார்.

    அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.

    அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.
    பாகிஸ்தானில் இருந்து திரும்பிய ஹமீத் நிகல் அன்சாரி தனது குடும்பத்தினருடன் மத்திய மந்திரி சு‌ஷ்மாவை சந்தித்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். #HamidNehalAnsari #SushmaSwaraj
    புதுடெல்லி :

    பாகிஸ்தானில் உள்ள தனது சமூக வலைத்தள தோழியை 2012-ம் ஆண்டில் சந்திக்க சென்றிருந்த மும்பை சாப்ட்வேர் என்ஜினீயர் ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33), சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு சென்றதாக கைது செய்யப்பட்டார். தண்டனை முடிந்து நேற்றுமுன்தினம் அவர் நாடு திரும்பினார்.

    இந்த நிலையில், டெல்லியில் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி சு‌ஷ்மா சுவராஜை அவர் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு உணர்வுமயமாக இருந்தது.

    சு‌ஷ்மா சுவராஜ், அன்சாரியை தாய் போல தழுவி, தட்டிக் கொடுத்தார். அப்போது அவர், ‘‘என்னை மன்னித்து விடுங்கள். நன்றி அம்மா’’ என்று கூறினார்.

    தனது பாகிஸ்தான் அனுபவங்களை சு‌ஷ்மா சுவராஜிடம் பகிர்ந்து கொண்டபோது அவரது கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் உருண்டோடின.

    அப்போது சு‌ஷ்மா சுவராஜ், ‘‘உங்களிடம் நிறைய துணிச்சல் இருக்கிறது. நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது’’ என குறிப்பிட்டார்.

    அன்சாரி விவகாரத்தில் சு‌ஷ்மா சுவராஜ் தனிப்பட்ட முறையில் அக்கறையுடன் கவனம் செலுத்தி வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

    இதற்காக அன்சாரியின் தாயார் பாஜியாவும் சு‌ஷ்மா சுவராஜூக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். #HamidNehalAnsari #SushmaSwaraj
    பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரை விடுதலை செய்து, ஒரு மாத காலத்தில் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இம்ரான்கான் அரசுக்கு அங்குள்ள கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. #HamidNihalAnsari #Pakistancourt
    இஸ்லாமாபாத்:

    ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33) என்ற இந்தியர், பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இவரது பூர்வீகம், மும்பை ஆகும்.

    இவர் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் 2012-ம் ஆண்டு சட்ட விரோதமாக நுழைந்தார் என்றும், அவர் பாகிஸ்தானின் போலி அடையாள அட்டையுடன் காணப்பட்டார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    அவர் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் அறிமுகமான தோழியை சந்திப்பதற்காகத்தான் பாகிஸ்தான் சென்றதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மீது அங்குள்ள ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கில் அன்சாரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு ராணுவ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து அவர் பெஷாவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரது தண்டனைக்காலம் இன்று (15-ந் தேதி) முடிகிறது. ஆனால் அவரது விடுதலைக்கு அங்குள்ள இம்ரான்கான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதையடுத்து அன்சாரி தரப்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் காஜி முகமது அன்வர் வழக்கு தொடுத்தார்.

    அந்த வழக்கில், தண்டனைக்காலம் முடிவடையும் நிலையில், தன் கட்சிக்காரரை விடுதலை செய்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக கோர்ட்டு முறையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதிகள் ரூகுல் அமீன், கலந்தர் அலிகான் ஆகியோர் நேற்று முன்தினம் விசாரித்தனர்.

    அப்போது அன்சாரி தரப்பில் மூத்த வக்கீல் காஜி முகமது அன்வர் ஆஜராகி, “அன்சாரியின் தண்டனைக்காலம் டிசம்பர் 15-ந் தேதி (இன்று) முடிகிறது. ஆனால் அவரை விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகமும், சிறை அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளனர். எனவே அவரை 16-ந் தேதி காலையில் விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட வேண்டும்” என வாதாடினார்.



    அப்போது இம்ரான்கான் அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்டார்னி ஜெனரல், “அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்கள் இன்னும் தயார் ஆகவில்லை” என கூறினார்.

    உடனே நீதிபதி கலந்தர் அலிகான், “ தண்டனைக்காலம் முடிந்த பின்னர் எப்படி ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியும்? 2 நாளில் அவரது தண்டனை முடிகிறது. ஆனால் அவரை விடுதலை செய்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது” என கருத்து தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சகம் சார்பில் ஆஜராகி இருந்த அதிகாரி, “ வரை விடுதலை செய்வதற்கான சட்ட ஆவணங்கள் தயார் ஆகிற வரையில் ஒரு மாத காலம் சிறையில் வைத்திருக்க முடியும்” என நீதிபதிகளிடம் குறிப்பிட்டார்.

    அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “அன்சாரியை ஒரு மாத காலத்திற்குள் விடுதலை செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.#HamidNihalAnsari #Pakistancourt
    பாகிஸ்தான் கோர்ட்டில் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வரும் நிலையில், குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #MumbaiAttack #Pakistan
    லாகூர்:

    மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி கடல் வழியாக நுழைந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த அவர்கள் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 166 பேர் உயிரிழந்தனர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    சுமார் 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதியும் பின்னர் தூக்கிலிடப்பட்டார்.



    இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியது. இதைப்போல பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தன.

    இதன் விளைவாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதி ஜாகியுர் ரஹ்மான் லக்வி உள்பட 7 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. இதில் லக்வி, கடந்த 2015-ம் ஆண்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ள 6 பேரும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த பிறகும் பாகிஸ்தான் கோர்ட்டில் இந்த வழக்கு மிகவும் மந்தமாகவே விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த வழக்கை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும்கூட எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது பைசலிடம் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட போது, அது குறித்து பேச மறுத்துவிட்டார்.

    ஆனால் இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம் இந்தியாதான் என பாகிஸ்தான் அரசு வக்கீல்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக 24 சாட்சிகளை பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைத்தால் ஒரு வாரத்தில் வழக்கு முடிக்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

    இது குறித்து தலைமை அரசு தரப்பு வக்கீலான சவுத்ரி அசார் கூறுகையில், ‘பயங்கரவாதிகள் மும்பைக்கு வருவதற்கு பயன்படுத்திய படகை பாகிஸ்தான் அதிகாரிகள் சோதனை செய்யவும், வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சாட்சிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும் இந்தியா ஒப்புக்கொண்டால், மும்பை தாக்குதல் வழக்கை முடிக்க ஒரு வாரம் கூட தேவையில்லை’ என்றார்.

    இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறிய மற்றொரு அரசு தரப்பு வக்கீலான அபுசார் பீர்சாதா, அடுத்த விசாரணை 28-ந்தேதி (நாளை) நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இது இரு நாடுகள் தொடர்புடைய வழக்கு என்பதால், இதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.

    இதற்கிடையே வழக்கு விசாரணை நீண்டு கொண்டே செல்வதால் லக்வி உள்ளிட்ட குற்றவாளிகள் 7 பேரும் விடுதலையாக பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை குற்றவாளிகள் தரப்பு வக்கீலான ராஜா ரிஸ்வான் அப்பாசிக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்ததுடன், அதனால்தான் குற்றவாளிகள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் உறவில் மிகப்பெரும் விரிசலை ஏற்படுத்திய மும்பை தாக்குதல் குற்றவாளிகள் விடுதலையாகும் வாய்ப்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இந்தியாவுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளித்து இருக்கிறது.
    ஊழல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். #NawazSharif #PakistanCourt
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்ததை ‘பனாமா லீக்ஸ்’ வெளியிட்டு இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.

    இந்த ஊழல் வழக்கில் நவாஸ் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்தி வரும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு, இந்த வழக்கில் சாட்சியம் அளிக்குமாறு நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக 128 கேள்விகள் அடங்கிய பட்டியலை நவாஸ் ஷெரீப்பின் வக்கீலிடம் நீதிபதி ஒப்படைத்து இருந்தார்.

    அதன்படி இந்த வழக்கில் நேற்று நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது லண்டன் அவென்பீல்டு குடியிருப்பில் வாங்கப்பட்டுள்ள வீடுகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘லண்டன் சொத்துகளை வாங்கவோ, அதற்கு உதவி புரியவோ இல்லை’ என கூறினார். மேலும் அந்த சொத்துக்கு தான் உரிமையாளர் இல்லை என மறுத்த நவாஸ் ஷெரீப், அதற்கான பணப்பரிமாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.  #NawazSharif #PakistanCourt
    ×